தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், ஒரே வீட்டு எண்ணில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இத்தகைய குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.25 லட்சம் வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் புதிய குழப்பங்கள் நீடிக்கின்றன.
குறிப்பாக, போடி சட்டமன்றத் தொகுதியின் முந்தல் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டு எண்ணில் மட்டும் 93 வாக்காளர்கள் வசிப்பதாகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், கொட்டக்குடி மற்றும் குரங்கணி பகுதிகளில் உள்ள ஒரு வீட்டில் 87 பேரும், பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் 73 பேரும் வசிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஒரே வீட்டு முகவரியில் 14 முதல் 58 பேர் வரை வசிப்பதாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது வாக்காளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் போடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் நல்லையாவிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாகத் தீவிரமாகச் சரிபார்த்து வருகிறோம். கடந்த தேர்தல்களின் போதும் இவ்வாறான பதிவுகள் இடம் பெற்றிருந்தன. அவை அனைத்தும் கள ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,” என்றார்.
தேர்தல் பிரிவின் மற்றொரு உயர்மட்ட அதிகாரி கூறுகையில், “ஒரே வீட்டில் இத்தனை பேர் வசிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது முறையாகக் கள ஆய்வு செய்யாமல் விவரங்கள் பதிவேற்றப்பட்டதா என்பது குறித்து அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) விளக்கம் கேட்டுள்ளோம். இறுதிப் பட்டியல் வெளியாவதற்கு முன், உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுத் தகுதியற்ற பெயர்கள் நீக்கப்படும் அல்லது முகவரிகள் முறைப்படுத்தப்படும்,” என உறுதியளித்தார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், போலி வாக்காளர்களைக் களையவும் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், போடி தொகுதியில் ஒரே வீட்டில் 93 பேர் இடம் பெற்றுள்ள விவகாரம் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.















