பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றில், முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை முதல்வர் நிதிஷ் குமார் இழுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாட்னாவில் உள்ள முதல்வர் செயலகமான ‘சம்வாத்’ மையத்தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மொத்தம் 1,283 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அதில் 10 பேருக்கு நேரடியாக முதல்வர் நிதிஷ் குமார் கடிதங்களை வழங்கினார். மீதமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக நியமனக் கடிதங்களை பெற்றனர்.
அப்போது, மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் ஹிஜாப் அணிந்து வந்திருந்த நிலையில், அதனை அகற்றுமாறு முதல்வர் நிதிஷ் குமார் சைகை செய்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் முழுமையாக ஹிஜாபை அகற்றுவதற்கு முன்பே, முதல்வர் அதைப் பிடித்து கீழே இழுத்ததாக காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேடையில் அருகிலிருந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, முதல்வரை தடுக்க முயன்றதாகவும் அந்தக் காணொளியில் தெரிகிறது. இந்த சம்பவம் எதிர்பாராத விதத்தில் நடைபெற்றதாகவும், அதனால் நிகழ்வில் குழப்பமான சூழல் உருவானதாகவும் கூறப்படுகிறது.
இந்த காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியான ஆர்ஜேடி, “நிதிஷ் குமாரின் செயல்பாடு அவரது மனநிலையைப் பற்றி கேள்விகளை எழுப்புகிறது” என விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பெண் மருத்துவரை பொது மேடையில் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது மிகுந்த கண்டனத்துக்குரியது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தரப்பை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, “ஒரு பெண்ணின் முகத்திரையை வலுக்கட்டாயமாக இழுப்பது, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பீகார் அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
