பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாகவும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு பெருமைபடத்தக்கது எனவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
ஐ.ஐ.டி. சென்னையில் நடைபெற்ற 62வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரையாற்றிய அவர், “நமது உள்நாட்டு ஆயுத உற்பத்தி திறனைக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்தோம். 9 பயங்கரவாத இலக்குகளை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து திட்டமிட்டு தாக்கினோம். எல்லைப் பகுதியில் அல்லாமல், துல்லியமாகக் குறிவைத்த இடங்களை 23 நிமிடங்களில் தாக்கி நிறைவு செய்தோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், தாக்குதலையடுத்து வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளித்த அவர், “இந்த தாக்குதலால் இந்தியா மீது எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு புகைப்படம் கூட அவர்கள் காட்ட முடியவில்லை. மே 10ம் தேதிக்கு முன்பும் பின்பும் பாகிஸ்தானின் 13 விமானத் தளங்களை ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற ஊடகங்கள் காட்டினாலும், தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எதையும் நிரூபிக்க இயலவில்லை,” என்றார்.
இந்தியாவின் வரலாற்றையும் தனது உரையில் எடுத்துக்காட்டிய தோவல், “இந்தியா ஒரு நாடாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அரசு என்பது ஒரு அமைப்பாக இருக்கலாம். நம் முன்னோர்கள் இந்நாட்டின் பாதுகாப்புக்காக பல தியாகங்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் 22 ஆண்டுகளில் நாம் சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகளை அடைகிறோம். அதற்குள் இக்கால மாணவர்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பார்கள்,” எனக் குறிப்பிட்டார்.