நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிறைத் தண்டனை

சென்னை : சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் செயலாளராக இருந்த அன்சுல் மிஸ்ரா, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததற்காக அவமதிப்பு வழக்கில் சிக்கினார். பொதுநோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்பாடின்றி விடப்பட்டதால், அந்த நிலத்தை மீண்டும் தங்களுக்கு வழங்க கோரி லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அன்சுல் மிஸ்ரா செயல்படுத்தாததால், அவருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன் கூறியதாவது :

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

இருப்பினும், மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் வகையில், அந்த தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

மேலும், அன்சுல் மிஸ்ரா தனது சம்பளத்தில் இருந்து மனுதாரர்களாக உள்ள இருவருக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாத நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, அன்சுல் மிஸ்ரா நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

Exit mobile version