காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், திருச்சி சிவாவின் பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, “காமராஜருக்கு ஏசி வசதி இல்லாமல் இருந்தால் உடலில் அலர்ஜி ஏற்படும் என்பதால், அவருக்காக கருணாநிதி குளிர்சாதன வசதி செய்து வைத்தார். உயிரிழக்கும் தருவாயிலும், கருணாநிதியின் கைகளைப் பிடித்து ‘நீங்கள்தான் நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’ என காமராஜர் கேட்டுக் கொண்டார்,” என கூறினார்.
இவ்வாறு அவர் பேசியது சமூக வலைதளங்களிலும் அரசியல் மையங்களிலும் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. தமிழக காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி. கார்த்தி சிதம்பரம், தவெக பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் இந்த பேச்சை கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, “ஒரு பெரிய தலைவர் மீது இப்படிச் சின்ன சின்ன கூச்சலோடு பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. ‘ஏசி இல்லாதால் அலர்ஜியா? இப்படியொரு தலைவருக்காக ஏசி போட்டோம் என்று சொல்லுவது அசிங்கமா இல்லையா?’ என கேள்வி மேல் கேள்விகளை எழுப்பினார்.
“இது போன்ற அரசியல் பேச்சுகள் காமராஜரின் சீரிய பணிகளை சிறுமைப்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது. வரலாறு பேசியே தீர்ப்பு சொல்வது நியாயமானதல்ல,” என அவர் வலியுறுத்தினார்.
திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், இப்போது இந்த வகையான பேச்சுகள் தொடருமானால் எதிர்க் கூட்டணிக்குள் மதிப்பீட்டு மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.