வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திருநெல்வேலியில் தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி, தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு திருநெல்வேலியில் நடந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சோனியாவின் கனவு ராகுலை பிரதமராக்குவது. ஸ்டாலினின் கனவு உதயநிதியை முதல்வராக்குவது. ஆனால், இந்த இருவரின் கனவும் ஒருபோதும் நிறைவேறாது” என கடுமையாக விமர்சித்தார்.
அதனை தொடர்ந்து, அமித் ஷா பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் விவாதங்களை முடக்குவதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செப்டம்பர் 7-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதற்கான அழைப்பை மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கார்கே மற்றும் பிரியங்காவுக்கு அனுப்பியுள்ளார். எனினும், செப்டம்பர் 9-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால், அவர்கள் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.