பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் குழப்பம் ஏற்படுத்தி மத்திய அரசு எதை சாதிக்க முயற்சிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டைத் தண்டிப்பது ஏன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்த 10 கேள்விகளுக்கு பின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தொடர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணியில் சேர்ந்தவுடன் அவர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் ‘வாஷிங் மெஷின்’ வழியாகச் சுத்தமாக மாறுவது எப்படி?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல், நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்திய மொழிகளுடன் சேர்த்து சமஸ்கிருதத்தில் மட்டுமே பெயர் வைப்பது எந்தவிதமான ஆணவம் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்களே குழந்தைகளிடம் அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைப் பரப்புவது ஏன் என்று அவர் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவிப்பதன் நோக்கம் என்ன எனவும், மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன் எனவும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இரும்பின் தொன்மையை தமிழ்நாடு அறிவியல்பூர்வமாக நிரூபித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்காத மத்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், கீழடி ஆய்வு அறிக்கையைத் தடுக்கவும் தேவையற்ற காரணங்கள் கூறப்படுவது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.
“இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வருமா? அல்லது வழக்கம்போல வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி மூலம் பொய்யான பிரசாரங்களைத் தொடங்கப்போகிறீர்களா?” என கடைசியில் தனது பதிவை முடித்துள்ளார்.
 
			















