பிரதமர் மோடிக்கு 5 வயது சிறுமி எழுதிய புகார் கடிதம் – இணையத்தில் வைரல்

பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 வயது சிறுமி ஒருவர் எழுதிய கையெழுத்துக் கடிதம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு, நீண்டநாள் போக்குவரத்து நெரிசலுக்காகப் பிரபலமான நகரமாக விளங்குகிறது. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், அதிகப்படியான வாகனப் பயன்பாடு மற்றும் சாலை நிலைமைகள் காரணமாக பிரச்சனை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அரசு பலமுறை அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையில், கடந்த ஞாயிறு பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவுக்கு வருகை தந்து, மெட்ரோ ரயிலின் மஞ்சள் நிற வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அவரது வருகைக்கு பிந்தைய தினங்களில், 5 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கையெழுத்துக் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், “நரேந்திர மோடி ஜி, பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக உள்ளது. இதனால் நாங்கள் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் தாமதமாக செல்கிறோம். சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எங்களுக்கு உதவுங்கள்” என்று சிறுமி பதிவு செய்துள்ளார்.

இந்த கடிதம் பலரிடமும் கவனத்தை ஈர்த்து, சிறுமியின் நேர்மையான கருத்தை பாராட்டும் விதமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

Exit mobile version