இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அக்கட்சியின் மூத்த பெருந்தகை ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101-வது பிறந்தநாள் விழா ஆகிய இரட்டைப் பெருவிழாக்கள் கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டன. இந்திய விடுதலைப் போராட்டக் களத்திலும், அதற்குப் பிந்தைய உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கு மாநிலப் பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், “இந்தியாவின் விடுதலைக்கு முன்பே முளைத்த பேரியக்கம் கம்யூனிஸ்ட் கட்சி. ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் மூன்று முறை தடை செய்யப்பட்ட போதும், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்கள் பணியாற்றிய வரலாறு நமக்கு உண்டு. அன்றைய காலகட்டத்தில் பல தலைவர்கள் தங்களின் வாழ்நாளைச் சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தனர். அத்தகைய தியாகங்களால்தான் இந்த இயக்கம் இன்று நூற்றாண்டு கண்டு நிலைத்து நிற்கிறது. இன்றைய இளைஞர்கள், மூத்த தலைவர்களின் நேர்மையான மற்றும் எளிமையான வாழ்க்கையைப் பாடமாக எடுத்துக் கொண்டு சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த விழாவோடு இணைந்து, கட்சியின் மறைந்த மூத்த தலைவர்களான அமீர்கான் அவர்களின் 36-வது நினைவு தினம் மற்றும் கே.டி.கே. தங்கமணி அவர்களின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 101-வது வயதில் தடம் பதிக்கும் ஆர்.நல்லகண்ணு அவர்களின் பொதுவாழ்வுத் தூய்மையைப் போற்றும் வகையில் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சிவசாமி, துணைச் செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு கட்சியின் கொள்கைப் பயணத்தைத் தொடர உறுதியேற்றனர்.
















