சேவை மனப்பான்மையுடன் செவிலியப் பணியைத் தொடர உறுதி: கோவை ராயல் கேர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா கோலாகலம்

கோவையில் உள்ள ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான விளக்கேற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நீலம்பூர் பகுதியில் உள்ள ராமலக்ஷ்மி மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. செவிலியர் துறையின் முன்னோடியான ‘கைவிளக்கேந்திய காரிகை’ புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாகவும், மருத்துவத் துறையில் அடியெடுத்து வைக்கும் இளம் செவிலியர்களிடையே அர்ப்பணிப்பு உணர்வை உருவாக்கும் நோக்கிலும் இந்த ஆண்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும், நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மாதேஸ்வரன் விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒரு நோயாளியின் விரைவான முன்னேற்றத்திலும், குணமடைவதிலும் மருத்துவர்களுக்கு இணையாகச் செவிலியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அன்பு, பொறுமை மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகிய மூன்றையும் ஒருங்கே பெற்றிருப்பவர்களே சிறந்த செவிலியர்களாக ஜொலிக்க முடியும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டல செவிலியர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் ஜெயினி கெம்ப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். செவிலியர் துறையில் உலக அளவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்து அவர் விரிவாக விளக்கினார். “செவிலியர்கள் கையில் ஏந்தும் இந்த ஒளி, வெறும் வெளிச்சம் மட்டுமல்ல; அது நோயாளிகளின் வாழ்வில் அவர்கள் ஏற்றப்போகும் நம்பிக்கையின் அடையாளம். செவிலிய அறிவு, செயல் திறன் மற்றும் ஆத்மார்த்தமான சேவை மனப்பான்மை ஆகியவற்றை இந்த விளக்கேற்றுதல் விழா குறிக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, பேராசிரியர் ஸ்மிதா நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, பி.எஸ்.சி (B.Sc Nursing) மற்றும் டி.ஜி.என்.எம் (DGNM) முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். வெள்ளை உடை அணிந்து, கையில் ஏந்திய ஒளியுடன் மாணவர்கள் நின்றது காண்போரைக் கவரும் வகையில் அமைந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனத் திரளானோர் கலந்துகொண்டு வருங்காலச் செவிலியர்களை வாழ்த்தினர்.

Exit mobile version