நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைநகர் சாலையோரத்தில் நேற்று காலை 22 வயது வாலிபர் ஒருவர் பல்வேறு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் கிடைத்ததும் நாமக்கல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தை நாமக்கல் எஸ்.பி. விமலா, ஏ.எஸ்.பி. ஆகாஷ் ஜோஷி ஆகியோர் பார்வையிட்டனர். கழுத்து, கன்னம் உள்ளிட்ட இடங்களில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்தன. மேலும், உடல் அருகில் கிடந்த கை கடிகாரம், காலணி, மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மனோ (19) என்பதும், அவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
மர்ம நபர்கள் மேற்கொண்ட இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















