மாவட்ட மக்கள் நலனுக்காக அரசு வழங்கும் சுகாதார சேவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரடியாக கண்காணிக்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சமீபத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சரிவர செயல்படவில்லை என்ற பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், செப்டம்பர் 12ஆம் தேதி இரவு கலெக்டர் சாதாரண உடையுடன், தனியார் வாகனத்தில் அங்கு சென்றார். நோயாளியாக வந்த அவர், காய்ச்சல் உள்ளது என்று கூறியபோதும், எந்தவித பரிசோதனையும் செய்யாமல் நர்ஸ் ஊசி போட முயன்றதாக தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கலெக்டர், “டாக்டர் எங்கே ? ஏன் பரிசோதனை செய்யாமல் ஊசி போடுகிறீர்கள் ?” என்று கண்டித்தார். அப்போது தான் ஊழியர்களுக்கு அவர் கலெக்டர் என்பதை உணர்ந்தது. இதனால் மருத்துவமனை திடீரென பரபரப்பானது.
பின்னர் மருத்துவ பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், “ரிக்கார்டுகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. டியூட்டி நேரத்தில் டாக்டர் இல்லாமல் இருப்பது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
இந்த திடீர் ஆய்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதுடன், பொதுமக்கள் மிருணாளினியின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.