கோவை காந்திபுரம் பகுதியில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையினால் மிக பிரம்மாண்டமான முறையில் எட்டு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் ‘பெரியார் அறிவுலகம்’, கட்டுமானப் பணிகளின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துவக்கத்தில் ‘கலைஞர் நூலகம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘பெரியார் நூலகம்’ எனப் பெயரிடப்பட்ட இக்கட்டடம், தற்போது நூலகத்துடன் கூடிய நவீன அறிவியல் மையங்கள் மற்றும் கோளரங்க வசதிகளைக் கொண்டிருப்பதால் ‘பெரியார் அறிவுலகம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழைய மத்திய சிறை வளாகத்திற்குச் சொந்தமான 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில், ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் இந்த அறிவுசார் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, பார்வையாளர்கள் விண்வெளிக்குச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பிரத்யேக ‘லிப்ட்’ வசதி அமையவுள்ளது. இதற்காகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துபாயில் உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள தொழில்நுட்பங்களைக் கேட்டறிந்து இங்குச் செயல்படுத்தி வருகின்றனர். முதல் தளத்தில் உள்ள அறிவியல் காட்சிகளைப் பார்த்துவிட்டு, ஏழாவது தளத்திற்கு இந்த நவீன லிப்ட் மூலம் செல்லும்போது, பயணிகள் விண்வெளியில் மிதப்பது போன்ற மெய்நிகர் அனுபவத்தைப் பெறுவார்கள். இதற்காக விண்வெளி ஓடம் போன்றே அந்த லிப்ட் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரிய புத்தகங்கள் இங்கு இடம்பெறவுள்ளன. மேலும், ஒரே நேரத்தில் 181 கார்கள் மற்றும் 451 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பரந்து விரிந்த வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமான ரீதியாகப் பல சவால்களைக் கடந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இயற்கை காற்று உள்ளே வரும் வகையில், முதல் தளத்திலிருந்து ஏழாவது தளம் வரை சுமார் 100 அடி உயரத்திற்குச் சுவர் இல்லாமல் இடைவெளி விடப்பட்டு, பிரம்மாண்ட கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழாவது தளத்தில் 30 மீட்டர் நீளம் மற்றும் 24 அடி அகலத்திற்கு 5 அடி உயரமான கான்கிரீட் பீம் அமைக்கும் பணியைப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மிகவும் கவனமுடன் மேற்கொண்டுள்ளனர். தற்போது நான்கு தளங்களின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், முகப்புப் பகுதியில் கண்ணாடி பொருத்துதல், கிரானைட் பதித்தல் மற்றும் உட்புற அலங்காரப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நுழைவாயில் பகுதியில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை நிறுவப்படவுள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

















