முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் ‘Coffee with Collector’ நிகழ்ச்சி இம்முறை (19வது நிகழ்வு) சிறப்பாக இடம்பெற்றது. இம்முறை, முதன்முறையாக வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் 20 பேர் கலந்துகொண்டு, இந்திய ஜனநாயக அமைப்பின் முக்கிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், தலைமையில், “பொது நிர்வாகம் மக்களுக்குள், மக்களின் எண்ணங்கள் நிர்வாகத்துக்குள்” என்ற நோக்கத்துடன் 2025 ஜூன் 30 முதல் தொடங்கி, இதுவரை 18 நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், மக்களும் நிர்வாகமும் இடையிலான தொடர்பு வலுவடைந்து, பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து நேரடி கருத்துக்கள் சேகரிக்கப்படுகின்றன.  இம்முறை நடைபெற்ற 19வது “Coffee with Collector” நிகழ்ச்சியில், முதன்முறையாக வாக்களிக்க உள்ள 18 வயது இளைஞர்கள் பங்கேற்று, தேர்தல் முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.

மாவட்ட ஆட்சியர் உரையாற்றியபோது கூறியதாவது: “ஒரு வாக்கு என்பது ஒரு நபரின் உரிமை மட்டுமல்ல; அது சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி. ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.” அவர் மேலும், இந்தியா மற்றும் பிற நாடுகளின் தேர்தல் நடைமுறைகள், ஒரு கட்சி – பல கட்சி அமைப்புகளின் அரசியலமைப்புச் சட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் பணி உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை விரிவாக விளக்கினார்.

மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு வலியுறுத்தியதாவது: “அரசியல் என்பது கருத்து, ஆனால் அரசியலமைப்பு என்பது கடமை. அரசியலமைப்பை அறிந்த இளைஞர்கள் மட்டுமே உண்மையான வாக்காளர்கள். தினமும் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்; அது சமூகத்தின் திசையை அறிய உதவும்.” அவர் மேலும் தெரிவித்தார்: இந்த நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு. ச. வினோதினி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு. அ. முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version