அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்திய மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் போலவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் பிற நாடுகளுக்கும் அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது. இதற்கு உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் சீனாவுக்கும் அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட விருப்பம் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:
“இந்தியா, சீனா ஆகியவை முக்கிய வளரும் நாடுகள். இரு தரப்பும் ஒத்துழைத்தால் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும். இரு நாடுகளுக்கிடையேயான பொது ஒப்பந்தங்களை செயல்படுத்த, இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்பட்டால், இரு நாடுகளின் உறவுகள் நல்ல முன்னேற்றம் காணும்,” என அவர் கூறினார்.