சேலம் – கெங்கவல்லி : ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை சாலையில் வீசியதற்காக தி.மு.க. பேரூர் அவைத்தலைவர் உள்ளிட்ட 22 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூர் ஏரிக்குச் செல்லும் ஓடை கரையிலுள்ள இலுப்பைத்தோப்பு, கெங்கவல்லி நகர் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு கட்டடங்களாக இருந்தன. இந்த ஓடையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கையாக, மூன்று மாதங்களுக்கு முன் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே, மீண்டும் அந்தப் பணி தொடங்க விவசாயிகள் அண்மையில் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். இதையடுத்து, தாசில்தார் நாகலட்சுமி உத்தரவின் பேரில் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நேற்று காலை 8 மணிக்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்தனர்.
பணி தொடங்கி ஐந்து வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியை ஆக்கிரமித்து வசித்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, தி.மு.க. பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் தலைமையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எதிர்ப்பின்போது, தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டைகள், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாதுரை ஆகியோரது படங்கள் சாலையில் வீசப்பட்டு, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு பணியை தடுத்தல், முதல்வர் படத்தை அவமரியாதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிங்காரம் உட்பட 22 பேருக்கு எதிராக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.