சென்னை :
திராவிட இயக்கத்தின் முன்னோடியும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணாதுரை பிறந்தநாள் விழா இன்று மாநிலம் முழுவதும் நினைவுகூரப்பட்டது. அவரது 117-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணா திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என்றும், மக்கள் உரிமைகளை பாதுகாப்போம் என்றும் அதில் உறுதி மொழியிடப்பட்டது.
விழாவிற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா திருவுருவப்படத்திற்கும், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ் அன்னை தந்திட்ட தலைமகன் பேரறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய தமிழ்நாட்டை எப்போதும் நிமிர்த்திக் காப்போம்” என தெரிவித்துள்ளார்.
















