முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி முதல் தென்காசி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதலில் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு, பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
அடுத்த நாள் 29ஆம் தேதி தென்காசி மாவட்ட பணிகளை முடித்துவிட்டு, மதுரைக்கு பயணமாகும் முதலமைச்சர், அன்றிரவு அங்கேயே தங்குவார்.
30ஆம் தேதி காலை, தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனுக்குச் சென்று அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பார்.
இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு அதே நாளில் சென்னை திரும்பும் திட்டம் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
