சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறுமாறு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (12.09.2025) கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவு 8 செப்டம்பர், 2025 அன்று வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில், அணுக்கனிமங்கள் மற்றும் அரிய கனிமங்களுக்கான சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்கள், குத்தகைப் பகுதியின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, தனது கடிதத்தில் ஸ்டாலின், “தமிழக கடற்கரை பகுதிகள் அரிய மண் கனிமங்களை கொண்டுள்ளன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணற்கரைகள் ஆமைகள், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பல்லுயிரியலுக்குத் தாயகம். மேலும் அவை கடலரிப்பு மற்றும் சூறாவளிகளுக்கு இயற்கைக் கேடயங்களாக செயல்படுகின்றன. இங்கு சுரங்கம் மேற்கொள்வது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார்.
அவர் மேலும், 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பில் கட்டாய பொதுமக்கள் கருத்துக் கேட்பு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், பின்னர் 2006 அறிவிப்பில் இது வலுப்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். “பொதுமக்கள் கருத்துக் கேட்பை தவிர்ப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு, இடம்பெயர்ச்சி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சமூகங்களின் உரிமையை பறிக்கும். இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கையை பலவீனப்படுத்தும்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முந்தைய காலங்களில் இதுபோன்ற அலுவலகக் குறிப்பாணைகளை சட்ட ரீதியாக செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார். “இத்தகைய முக்கியமான கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு, மாநில அரசுகள் மற்றும் மக்களின் ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் வெளியிடப்படும் அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானவை” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 8 செப்டம்பர், 2025 அன்று வெளியிடப்பட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்திய முதலமைச்சர், “நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் பங்களிப்பதில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.