தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செல்லும் வழியில் மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியதை கண்டு ஆர்வம் கொண்டார். உடனே அவர்களிடமிருந்து சிலம்பத்தை பெற்று தாமும் சுற்றிய காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இதன் நடுவில், தென் மாவட்டங்களில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கும் பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை தென்காசி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், ரூ.445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.575 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மொத்தமாக ரூ.1,020 கோடிக்கு மேல் நிதி மதிப்புள்ள திட்டங்கள் தென்காசி மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றன.
இதற்கிடையில், கழுநீர்குளம் பகுதிகளில் மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்பு அளித்தனர். காரில் சென்றுகொண்டிருந்த முதலமைச்சர், அவர்களை கண்டு காரிலிருந்து இறங்கி சிலம்பத்தைப் பெற்றார். திடீரென சிலம்பத்தை சுற்றத் தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலினின் அசைவு அங்கிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
அதே நாளில், ஆலங்குளம் அருகே ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டை அவர் நேரில் பார்வையிட்டார். இது, “நான் முதல்வன்” திட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவி பிரேமாவுக்காக கட்டப்பட்ட வீடு ஆகும்.
முன்னதாக, கல்வியில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிரேமா, ஒரு அரசு நிகழ்வில் கலந்து கொண்டபோது, தந்தை மழையில் ஒழுகும் வீட்டில் வாழ்கிறார் என்று கூறி முதல்வரிடம் கண்ணீர் வடித்து வீடு கேட்டிருந்தார். உடனே அதே மேடையிலேயே வீடு வழங்க உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இன்று அந்த வீட்டின் கட்டுமான நிலையை நேரில் ஆய்வு செய்த அவர், அதிகாரிகளிடம் விரைவில் பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.
















