திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், தி.மு.க. அரசின் அணுகுமுறையைக் கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மிகக் கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பால் முருக பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தீபம் ஏற்றுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு தனது ‘இந்து விரோத’ மனப்போக்கின் காரணமாகவும், நிர்வாகக் காரணங்களைக் காட்டியும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின்போது, இந்து கடவுள்களையும், வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்தும் வகையில் அரசுத் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம், இது ஒட்டுமொத்த இந்துக்களையும் பெரும் மன வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பூரணச்சந்திரன் என்ற தீவிர முருக பக்தர், மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்கும் தி.மு.க. அரசின் நடவடிக்கையால் மனம் உடைந்து தீக்குளித்து உயிரிழந்துள்ளார். “ஆன்மிக பூமியான தமிழகத்தில், இந்துக்கள் தங்களது அடிப்படை வழிபாட்டு உரிமைகளைக் கூட நிலைநாட்ட முடியாமல், ஒரு பக்தர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கே இழுக்கு” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
பூரணச்சந்திரனின் இந்தத் தியாகத்திற்கும், உயிரிழப்பிற்கும் தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், ஒரு சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். உயிரிழந்த பக்தரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களிலாவது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் அரசு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி, ஒரு தீபத்தூணை ‘சர்வே கல்’ என்று சித்தரிப்பதைக் கைவிட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

















