ஜம்மு காஷ்மீர்: 1931 நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முயற்சித்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடையால் சுவர் ஏறி நினைவுச்சின்னத்திற்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 1931 ஜூலை 13 அன்று மகாராஜா ஹரிசிங் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வரலாற்றுச் சம்பவத்தினை நினைவு கூறும் விதமாக, ஆண்டுதோறும் அன்றைய தினம் பல அரசியல் தலைவர்கள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், 2019-ஆம் ஆண்டு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஜூலை 13 நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படாமல், முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டும், அந்த தினத்தில் சிலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ஒருவர்.
ஜூலை 13 அன்று அஞ்சலி செலுத்த நினைத்த உமரை, நினைவிட நுழைவதில் போலீசார் தடுத்தனர். தொடர்ந்து, ஜூலை 14 காலை, மீண்டும் நினைவிடத்துக்குச் செல்ல முயன்ற அவரை நுழைவாயிலை பூட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, போலீசாரின் தடுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உமர் அப்துல்லா சுவர் ஏறி நினைவிடத்திற்குள் குதித்து, அங்குள்ள நினைவுச் சின்னத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இந்த காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உமர் அப்துல்லா “என்னை நினைவிடத்துக்குள் செல்லவிட மறுத்ததால், சுவர் ஏறியே சென்று அஞ்சலி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது ஜனநாயகத்தின் தராசில் எங்கு நிற்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்,”
எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.