செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட பலர் அரசுப் பணியில் – முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணை வழங்கினார்

சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு பணி வழங்கும் திட்டத்தின் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நியமன ஆணைகளை வழங்கினார்.

செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் இளநிலை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆணையை நேரடியாக முதல்வர் வழங்கினார்.

அதேபோல், கால்பந்து வீராங்கனை கே. சுமித்ரா தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளராகவும், கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யா தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாய்மர படகு வீரர் பி. சித்ரேஷ் தத்தா, சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலராக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிக்கு 13 நபர்களுக்கான நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

குறிப்பாக, சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வைஷாலி இரண்டாம் இடத்தைப் பெற்றார். நேபாளத்தில் நடந்த 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், சுமித்ரா கால்பந்தில் முதலிடம் பெற்றார். அதே போட்டியில் சத்யா கூடைப்பந்தில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், சித்ரேஷ் தத்தா ஹாங்ஷோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகு போட்டியில் பங்கேற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

Exit mobile version