சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் முக்கிய வழித்தடமாக கருதப்படும் பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் பொதுப் போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தின் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது, பூந்தமல்லி–போரூர் மெட்ரோ சேவையை அவர் தொடங்கி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டிசம்பரில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், சில தொழில்நுட்ப காரணங்களால் இது ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் காரிடார்–4 ஆகும் இந்த வழித்தடம், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை போரூர் வழியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான சுமார் 9 கிலோமீட்டர் நீளப் பகுதி முதற்கட்டமாக திறக்கப்பட உள்ளது. நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம், மேலும் தேவையான அனுமதிச் சான்றிதழ்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களே சேவை தொடங்குவதில் தாமதத்திற்கு காரணம் என சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் கட்டத் திட்டத்தின் 118.9 கிலோமீட்டர் நீள வழித்தடங்களில் நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பொறுப்பை டெல்லி மெட்ரோ ரயில் கழகம் ஏற்றுள்ளது. இதற்காக பணியாளர்கள் தற்போது பயிற்சி பெற்று வருவதுடன், பல கட்ட சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி–போரூர் வழித்தடத்தில் மொத்தம் 13 மூன்று பெட்டி ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 30 ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், ரயில்கள் எதிர்காலத்தில் ஓட்டுநர் இல்லா முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த முறை படிப்படியாகவே அமல்படுத்தப்படும் என CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழித்தடத்தில் உச்ச நேரங்களில் ரயில்கள் ஆறு நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையங்கள், முதல் கட்டத்தின் பெரிய நிலையங்களை விட சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் நடைமேடைகளை விரைவாக அடைய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தேசிய பொதுப் பயண அட்டைகள் (NCMC) மற்றும் QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட் முறைகள், இரண்டாம் கட்டத்திலும் தொடரும். மேலும், பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், உயர்மட்டப் பகுதிகளில் உள்ள நிலையங்களில் அரை உயர தடுப்புத் திரைகள் பொருத்தப்படுகின்றன.
இதற்கிடையே, இந்த வழித்தடத்தை இயக்குவதற்கான முக்கிய அங்கீகாரத்திற்காக ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை CMRL எதிர்பார்த்து வருகிறது. அந்த அனுமதி கிடைத்த பின்னரே அடுத்த கட்ட பாதுகாப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரின் மேற்குப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பூந்தமல்லி–போரூர் மெட்ரோ சேவை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
