குடிமக்கள் புகார்களுக்கு நேரடியாகச் சென்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை மாற்றி பிரச்னை தீர்க்கப்பட்டதாகக் காட்டியதாக சென்னை மாநகராட்சிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுண்ணாம்புக்கோளத்தூர் பகுதியில் திறந்த வெளியில் மின்கேபிள்கள் தொங்குவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தினமும் அந்த வழியாகச் செல்கின்றனர். இதனால் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இந்த பிரச்னையை அப்பகுதியில் வசிக்கும் கண்ணதாசன் என்ற நபர் மாநகராட்சியின் இணையதளத்தில் புகார் அளித்தார்.
புகாரில், உடனடி நடவடிக்கை எடுத்து மின்கேபிள்களை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த மாநகராட்சி, பிரச்னை சரிசெய்யப்பட்டதாகக் கூறி புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டது. அந்தப் புகைப்படத்தை உதவி நிர்வாக பொறியாளர் தான் பதிவிட்டார்.
ஆனால், வெளியிடப்பட்ட புகைப்படம் உண்மையில் சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்படாதது; மாறாக, ஏஐ மூலம் டிஜிட்டல் திருத்தம் செய்யப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. புகார்தாரர் அனுப்பிய புகைப்படத்தில் இருந்த வாகனங்களை மட்டும் அழித்து, கேபிள்களை அப்படியே வைத்திருப்பதன் மூலம் “பிரச்னை தீர்க்கப்பட்டது” என போலியாக காட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
இதனால், “புகாரின் உண்மை நிலையை நேரில் ஆய்வு செய்யாமல், ஏஐ மூலம் படங்களைத் திருத்தி பிரச்னை சரியாகிவிட்டது என்று சொல்லும் மாநகராட்சி அணுகுமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதா?” என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பரந்த பரப்பை உள்ளடக்கியது. அங்கு குடிமக்கள் தினசரி சந்திக்கும் சிக்கல்களுக்கு நேர்மையான தீர்வு வழங்குவது சவாலான பணியாக இருந்தாலும், பிரச்னை தீர்க்கப்பட்டதாகக் காட்ட ஏஐ புகைப்பட மாற்றங்களை பயன்படுத்துவது பொறுப்பை தவிர்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.