திருநெல்வேலியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவரின் பெயரில் “அண்ணாமலை நற்பணி மன்றம்” என்ற அமைப்பை தொடங்கி, அதற்கான கொடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அண்ணாமலை தாமே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “திருநெல்வேலியில் எனது பெயரில் ஒரு நற்பணி மன்றம் தொடங்கி, அதன் கொடியை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனது மீது காட்டப்படும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனினும், இதுபோன்ற அமைப்புகள் அல்லது கொடிகள் தொடர்பாக எனக்கு எந்த உடன்பாடும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர், “எனது பெயர், புகைப்படம் போன்றவற்றைப் பயன்படுத்தி தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், குடும்ப நலன்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுகிறேன்,” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்ணாமலைவின் இந்தப் பதிவு மூலம், அவரது பெயரை அடிப்படையாகக் கொண்ட எந்தவித அமைப்புகளும் தன்னுடன் தொடர்பில்லையென அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் கட்சிக்கு பெரும் கவனம் பெற்றிருந்த அண்ணாமலை, 2024 மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். பின்னர், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றம் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர் தனிக் கட்சி தொடங்குவாரா என்ற ஊகங்கள் எழுந்தன. ஆனால் அத்தகைய தகவல்களை அண்ணாமலை மறுத்திருந்தார். தற்போது அவரது பெயரில் உருவான நற்பணி மன்றம், அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

















