திமுக மூத்த தலைவர்கள் மீதான வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

திமுக மூத்த தலைவர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் ஐ.பெரியசாமி மீதுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜெகத்ரட்சகன் மீது சிங்கப்பூர் நிறுவன பங்குகளை அனுமதி இல்லாமல் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐ.பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த இரண்டு முக்கியத் தலைவர்கள் தொடர்பான வழக்குகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தமிழகஅரசியலில் கவனம் பெற்றுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த சில்வர் பார்க் என்ற நிறுவனத்தின் 32.69 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வாங்கியதாக திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. சுங்கத் துறைஆணையர் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு, ஜெகத்ரட்சகனோ அவரது குடும்பத்தினரோ பணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்பது தெரியவந்தது.

அதேவேளையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக அமலாக்கத் துறை நோட்டீஸ்அனுப்பியது. இதற்கு எதிராக ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைவிதித்ததுடன், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, 2006-10 தி.மு.க. ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக இரண்டு கோடியே 10 லட்சரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஐ.பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்களை திண்டுக்கல் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு பிற்பிக்கப்பட்ட ஆணையை எதிர்த்து ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைவிதித்துள்ளது.

Exit mobile version