சிறைக்குள்ளேயே கஞ்சா வியாபாரம்: கைதிகளுடன் கைகோர்த்த காவலர் அதிரடி சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டச் சிறையில் பாதுகாப்புக் பணியில் இருக்க வேண்டிய காவலரே, கைதிகளுடன் ரகசியக் கூட்டணி அமைத்துச் சிறைக்குள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவலர் அன்பரசு என்பவரை, மதுரை சிறை எஸ்.பி. சதீஷ்குமார் தற்போது அதிரடியாகப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவலரே சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போதும், அவர்களின் உறவினர்கள் சிறையில் வந்து சந்திக்கும் போதும், வெளிநபர்கள் மூலமாகக் கஞ்சா கைமாற்றப்படுவதற்கு அன்பரசு பேருதவியாக இருந்துள்ளார். இவ்வாறு கைமாற்றப்படும் கஞ்சாவை அவரே பாதுகாப்பாக வாங்கி வைத்துக்கொண்டு, பின்னர் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளார். சமீபத்தில், வெளியே சென்று வந்த கைதி ஒருவரிடமிருந்து கஞ்சாவைப் பெற்று, அதனைத் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்தார். இது குறித்து ரகசியத் தகவல் கிடைத்த சிறைத்துறை அதிகாரிகள், அதிரடிச் சோதனை நடத்தியபோது கஞ்சாவுடன் அன்பரசு கையும் களவுமாகச் சிக்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை சிறை எஸ்.பி. சதீஷ்குமார் நேரில் வந்து சிறையில் இருந்த கைதிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், கஞ்சாவை வெளியிலிருந்து எப்படி வாங்கி வருவது என்று அன்பரசு தான் ஐடியா கொடுத்தார் என்றும், சிறைக்குள் அவரே கஞ்சாவை விற்பனை செய்தார் என்றும் கைதிகள் வாக்குமூலம் அளித்தனர். கைதிகளின் இந்த அதிரடித் தகவலைத் தொடர்ந்து, அன்பரசை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி., இது தொடர்பாகத் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறைக்குள் கஞ்சா பயன்படுத்திய மற்றும் அதனைப் பெற உதவிய கைதிகள் மீது திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சிறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். சிறைத்துறை நிர்வாகத்தில் கறுப்பு ஆடாகச் செயல்பட்ட காவலர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பிற ஊழியர்களிடையே பெரும் எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

Exit mobile version