தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் நண்பனுக்கு உருக்கமான ஆடியோ அனுப்பிவிட்டு ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி ரெயில்வே பீடர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிபாண்டியன். அவரின் மகன் சக்தி கணேஷ். இவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு நண்பனைச் சந்தித்து விட்டு வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சக்தி கணேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை மதித்தோப்பு ரயில்வே தண்டவாளத்தில் அவரது உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து சென்ற ரயில்வே போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பினர்.
பின்னர் விசாரணையில், சக்தி கணேஷ் தனது நண்பனுக்கு அனுப்பியிருந்த கடைசி ஆடியோவில், “அடுத்த ஜென்மம் இருந்தா பார்க்கலாம்… எல்லாம் முடிந்துவிட்டது. கல்லூரி அருகே தண்டவாளத்தில் கிடப்பேன், அங்கே வந்து எண்ணை பார்” என உருக்கமாக கூறியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த ஆடியோவை கேட்ட சக்தி கணேஷின் குடும்பத்தினரும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்து உடைந்துவிட்டனர்.
சில தினங்களாக காதல் தோல்வியால் மனம் உடைந்திருந்ததால் தான் சக்தி கணேஷ் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், உண்மையான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.