“ஓட்டுத் திருட்டு” எனக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை குறிவைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், ஓட்டு திருட்டு கால் சென்டர்கள் மற்றும் மென்பொருள் உதவியுடன் நடைபெறுகிறது; ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் காப்பாற்றுகிறார் என ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஆதாரம் இல்லை எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பீஹாரில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித்ஷா கூறியதாவது : “ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் பொய் கதைகளையே பரப்புகிறது. ராகுல் மேற்கொண்ட யாத்திரை, வேலைவாய்ப்பு, கல்வி, சாலை, மின்சாரம் ஆகிய காரணங்களுக்காக அல்ல. வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதே அதன் நோக்கம்.
ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை, இலவச ரேஷன், வேலைவாய்ப்பு, வீடு, மருத்துவ காப்பீட்டில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை – இவை அனைத்தும் வழங்கப்பட வேண்டுமா ? வேலைவாய்ப்புகளை நமது இளைஞர்களுக்கு வழங்காமல் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காங்கிரஸ் உதவுகிறது. தவறான அரசு அமைந்தால், நாடு முழுவதும் ஊடுருவல்காரர்களே நிறைந்து விடுவார்கள் என்பதை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துரைப்பது நமது கடமை” எனக் குறிப்பிட்டார்.
டில்லியில், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ராகுலுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியே கிடைத்துள்ளது. அவரது தலைமையில் காங்கிரஸ் 90 தேர்தல்களில் தோற்று விட்டது. இதனால் கோபமும் விரக்தியும் அவரிடம் அதிகரித்து வருகிறது.
அவர் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறார். ஆனால், அவை ஆய்வு செய்யப்பட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கூறினால், காங்கிரஸ் பின்வாங்குகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு, பின்னர் மன்னிப்பு கேட்பது, நீதிமன்றத்தால் கண்டிப்புக்கு உள்ளாவது ராகுலின் வழக்கமாகி விட்டது. ரஃபேல், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றம் கண்டித்ததை அவர் மறந்துவிட்டார்.
சேற்றை வாரி எறிந்து தப்பித்தல், ஹைட்ரஜன் குண்டு வீசப்போவதாகச் சொல்லி பட்டாசு வெடிப்பது போன்று செய்கிறார்” என தாக்கூரும் விமர்சித்தார்.