சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
ஹாஜிபூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. இந்த சம்பவம் ஒரே நேரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், எட்டு பேர் உயிரிழந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த 30 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை தீவிரமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, பஸ்ஸை அதிவேகமாக இயக்கியதால்தான் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்து மாநிலத்தெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.