இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தற்போது அவருக்கு மாற்றாக விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இல்லையென்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான காயம் காரணமாக பும்ரா அணிக்காக முழுமையாக விளையாட முடியாத நிலை நீடித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டதால் விமர்சனங்கள் எழுந்தன.
சில கிரிக்கெட் நிபுணர்கள், பும்ராவுக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு அளித்து, முக்கியமான தொடர்களுக்கு அவரை தயாராக வைத்துக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பும்ரா குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
“டெஸ்ட் தொடரின் போது பந்துவீச்சாளர்களை மாற்றுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் பும்ரா போன்ற பவுலர் உலகிலேயே இல்லை. அவரை முன்கூட்டியே ஓய்வு பெறச்சொல்லும் நிலை உருவாக்கக்கூடாது. அவர் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என நினைக்கவில்லை. ஆனால் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
அடுத்த மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. அதற்கான இந்திய அணியின் வீரர் பட்டியல் நாளை அறிவிக்கப்பட உள்ளது. மேலும், அதன் பின்னர் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக பும்ராவுக்கு ஆசியக் கோப்பையில் ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.