பிரிக்ஸ் உச்சிமாநாடு – இரண்டாம் நாள் : பிரதமர் மோடி முக்கியமான கருத்துகள் வெளியிட்டார் !

17-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு பிரேசில் நகரில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கியமான கருத்துகளை வெளியிட்டார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்புநாடுகளுடன், தற்போது எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, அமெரிக்காவின் வரிக் கொள்கைகள், காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான பிரச்னைகள் மற்றும் ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் போன்ற சர்வதேச சிக்கல்களின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

மாநாட்டின் தொடக்க நாளில் பிரதமர் மோடியை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டி சில்வா உற்சாகமாக வரவேற்றார். பின்னர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பதிவிட்ட மோடி, “அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவ உலகத்தைக் கட்டமைக்கும் திறன் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு உண்டு. இது, உலக நன்மைக்கும் பொருளாதார ஒத்துழைப்புக்கும் உறுதியான சக்தியாக இருக்கும்,” என குறிப்பிட்டார்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், “அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் எந்த நேரமும் பாதிக்கப்படக் கூடாது. உலக நாடுகள் இதை உறுதிப்படுத்த வேண்டும். சுயநல நோக்கில் இவற்றை ஆயுதமாக மாற்றும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார். மேலும், இந்தியா தலைமையிலான அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பு, மனிதாபிமான அணுகுமுறைக்கு முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநாட்டின் நிறைவாக, பருவநிலை மாற்றத்திற்கான நிதியளிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் தொடர்பாக இரு முக்கிய பிரகடனங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரேசிலியாவின் தலைநகரான பிரேசிலியாவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் லுலா டி சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version