கூட்டுறவு துறையின் அரசு பணியாளர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக சில மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசுப் பணியை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக உழைத்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. திமுக அமைச்சர்கள், பணியிடங்களை பணம் வாங்கி வழங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தும், எந்த மாற்றமும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என். நேருவின் துறையில் நியமனத்திற்காக பணம் கேட்கப்பட்டதாக முன்பே குற்றச்சாட்டு எழுந்திருந்ததை அண்ணாமலை நினைவூட்டினார். இதனிடையே, கூட்டுறவு துறையின் நாளைய நேர்முகத் தேர்விலும் பெரிய அளவில் லஞ்சம் வசூல் நடைபெறுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், “கடந்த காலத்தில் பணியிடம் வழங்க லஞ்சம் பெற்றதற்காக முன்னாள் சாராய அமைச்சர் சிறையில் இருந்தார். அதே அனுபவத்திலிருந்தும் தற்போதைய அமைச்சர்கள் பாடம் கற்றுக்கொள்ளாமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்ட முயற்சிக்கிறார்களா?” என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலினை நேரடியாக குறிவைத்த அவர், “இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடப்பதை முதல்வர் அறியாமல் இருக்கிறாரா? அல்லது அவை நடைபெறுவதற்கு அமைதியாக அனுமதி அளிக்கிறாரா?” எனவும் சாடியுள்ளார்.
நேர்முகத் தேர்வில் எந்த வித அநீதி இல்லாமல், திறமையான இளைஞர்களே தேர்வாக வேண்டும் என்பதையும், இதற்கான பொறுப்பை மேற்கொள்ளும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தேர்வு செயல்முறையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பதையும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
