சென்னை மற்றும் மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிர்ச்சி நிலவியது.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இமெயில் வந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தை முழுமையாக சோதனை செய்தனர்.
அதேபோல், சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும் மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால், அங்கிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த சந்தேகத்திற்குரிய பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. இதனால் மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை உயர்நீதிமன்றத்திற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அங்கு போலீசார் சோதனை நடத்தியதில் எந்தவித ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதேபோன்ற மிரட்டல் வந்ததால் நீதிமன்றம் காலி செய்யப்பட்டது. ஆனால் அப்போதும் அது புரளி என உறுதிப்படுத்தப்பட்டது.