இந்தியாவின் சொகுசு வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான பிஎம்டபள்யூ (BMW) குரூப் இந்தியா, 2025 ஆம் நிதியாண்டில் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 18,001 கார்களை விற்பனை செய்து, முந்தைய ஆண்டை விட 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் பிஎம்டபள்யூ பிராண்ட் மட்டும் 17,271 கார்களையும், மினி (MINI) பிராண்ட் 730 கார்களையும் சந்தைப்படுத்தியுள்ளன. மேலும், நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவான பிஎம்டபள்யூ மோட்டார்டு (BMW Motorrad), 5,841 மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்து தனது வலுவான இருப்பை உறுதி செய்துள்ளது.
பிஎம்டபள்யூ நிறுவனத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, இந்திய நுகர்வோர் மத்தியில் பிரீமியம் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்து வருவதையே காட்டுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியைத் தக்கவைத்து வரும் இந்நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும், ஒவ்வொரு காலாண்டிலும் முன்னெப்போதும் இல்லாத விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடைசி காலாண்டில் மட்டும் 6,023 வாகனங்கள் விற்பனையாகி, 17 சதவீத வளர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளது. இது இந்திய சொகுசு வாகன சந்தையின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனை குறித்து பிஎம்டபள்யூ குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் பேசுகையில், “2025 ஆம் ஆண்டு பிஎம்டபள்யூ குரூப் இந்தியாவுக்கு ஒரு பொற்காலமாகும். 18,000 கார்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியது எங்களின் தரத்திற்கும், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாகும். பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் மட்டுமன்றி, எலக்ட்ரிக் வாகனப் பிரிவிலும் (EV) நாங்கள் முன்னிலை வகிக்கிறோம். எங்களின் எஸ்யூவி மற்றும் செடான் மாடல்கள் இந்தியச் சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அனைத்துப் பிரிவுகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 20 புதிய தயாரிப்புகளே முக்கியக் காரணமாகும். பிஎம்டபள்யூ iX1 லாங் வீல்பேஸ், புதிய பிஎம்டபள்யூ எக்ஸ்3, மினி கன்வர்டிபிள் போன்ற மாடல்கள் இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதேபோல், இருசக்கர வாகனப் பிரிவில் அறிமுகமான பிஎம்டபள்யூ ஆர் 1300 ஜிஎஸ் அட்வெஞ்சர் போன்ற ‘சூப்பர் பைக்’ மாடல்கள் சாகசப் பயண விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் கூடுதல் முதலீடுகளைச் செய்து, இந்திய சொகுசு வாகன சந்தையில் தனது சிம்மாசனத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பிஎம்டபள்யூ திட்டமிட்டுள்ளது.













