ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் திடீரென வெடித்ததால், கட்டிடம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் எட்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாத விசாரணையில் முக்கிய இடமாக இருந்த நவ்காம் காவல் நிலையம்
சமீப மாதங்களில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பயங்கரவாத செல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. இதில் முக்கிய பங்கு வகித்தது நவ்காம் காவல் நிலையம். டெல்லி செங்கோட்டையில் கார் குண்டுவெடிப்பு நடத்திய உமரின் கூட்டாளிகள் கைது செய்யப்படும் போது அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட அதிகளவு வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வளவு பெரிய அளவிலான ரசாயனங்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் பிற வெடிவகை பொருட்கள் அனைத்தும் நவ்காம் காவல் நிலையத்தில் தனியறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
முதற்கட்ட விசாரணையில், விபத்து எதிர்பாராத முறையில் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
ஹரியானா ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முஜாமிலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட:
360 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 2,900 கிலோ வெடி தயாரிப்பு பொருட்கள், ரசாயனங்கள், வயர்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்காக மாதிரி எடுக்கும் நேரத்தில் திடீரென எதிர்வினை ஏற்பட்டு வெடித்தன.
அச்சுறுத்தும் சத்தத்துடன் வெடி எழுந்ததால் பல அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது. சுற்றுவட்டார மக்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு துறை, கூடுதல் போலீஸ் படை மற்றும் ராணுவத்தினர் விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பேனர்கள் ஒட்டிய வழக்கில் தொடங்கி, பயங்கரவாதக் குழுவை சிக்கவைத்த விசாரணை
கடந்த அக்டோபர் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் போலீஸ் மற்றும் ராணுவத்தை மிரட்டும் வகையில் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து நவ்காம் மற்றும் ஸ்ரீநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆசிப் நிசார் தார், யாசீர் அல் அஷ்ரப், மசூத் அகமது உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மவுலவி இர்பான் அகமது கைது செய்யப்பட்டதுடன், தொடர்ச்சியான விசாரணையில் ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முஜாமில் மற்றும் பெண் மருத்துவர் ஷாகின் ஷாகித் ஆகியோரும் பிடிபட்டனர்.
இந்த கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பை நடத்திய உமர் அடையாளம் காணப்பட்டார்.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிவகை பொருட்கள் அனைத்தும் நவ்காம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் கட்டிடமே சாம்பலாகியுள்ளது.
இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
