கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக அமைத்துள்ள “உண்மை கண்டறியும் குழு” குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார்.
சம்பவம் குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இரங்கல் தெரிவித்ததோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் எட்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவில் எம்.பி. ஹேமாமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழு விரைவில் கரூருக்கு வந்து, உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
இதற்கு முன்பாகவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டிருந்தனர்.
இந்நிலையில் பாஜக எடுத்த இந்த நடவடிக்கை அரசியல் நோக்கத்தோடு இருப்பதாகத் திருமாவளவன் தனது சமூக ஊடகப் பதிவில் கடுமையாக சாடியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“கரூர் துயரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது. உண்மை கண்டறியும் குழு அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கத்தோடு மட்டுமே நிகழ்ந்துள்ளது” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாஜக நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “இந்தச் சதியை முறியடிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்” எனவும் திருமாவளவன் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்
