கோவை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்த எம்.பிக்கள் குழுவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஹேமா மாலினி பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
கோவையிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற கார், சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் பின்னால் வந்த வாகனத்துடன் மோதியதால் காரின் முன்புறம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக எம்.பி. ஹேமா மாலினி உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்குப் பிறகும், அதே காரில் அவர் கரூர் நோக்கிப் பயணம் தொடர்ந்தார்.
கரூரில் விஜய் தலைமையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சம்பவம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க எம்.பி. ஹேமா மாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளது. குழுவினர் இன்று கரூரில் ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
