தமிழ்நாட்டில் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது, “பாஜக அரசின் தமிழ்நாடு எதிர்ப்பு அணுகுமுறையின் வெளிப்பாடே” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு இரு நகரங்களுக்கும் தேவையான விரிவான திட்ட அறிக்கைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பிய பின்னரும், பாஜக அரசு அவற்றை நிராகரித்திருப்பது ஏற்க முடியாதது எனவும் தெரிவித்தார்.
திருமாவளவன் கூறியதாவது:
பாஜக ஆளும் பிற மாநிலங்களில், மதுரை–கோயம்புத்தூர் அளவிற்கு மிகக் குறைந்த குடியிருப்புகள் கொண்ட நகரங்களுக்கே மெட்ரோ திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் இரு முக்கிய நகரங்களுக்கு திட்டம் வழங்கப்படாதது, அரசியல் பாரபட்சத்தை தெளிவாக காட்டுகிறது என அவர் கூறினார்.
மனோகர் லால் கட்டார் விளக்கம் – ‘மக்கள் தொகை குறைவு’
தமிழ்நாடு முதலமைச்சரின் கண்டனத்திற்கு பதிலளித்த ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோயம்புத்தூரின் நகராட்சிப் பகுதி மற்றும் LPA பகுதி சேர்த்து போதுமான மக்கள் தொகை இல்லை; மேலும் பயணிகள் கணிப்புகள் அதிகரித்து காட்டப்பட்டுள்ளன, அதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை மறுத்த திருமாவளவன், 14 ஆண்டுகளாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாத நிலையில், பழைய தரவை வைத்து திட்டத்தை நிராகரிப்பது பொருந்தாததாகவும், இந்த காலகட்டத்தில் இரு நகரங்களின் மக்கள் தொகை பெரிதும் உயர்ந்திருப்பதை ஒன்றிய அரசு புறக்கணித்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஒன்றிய பாஜக அரசு கூட்டாட்சி ஆட்சிமுறையை மதிக்காமல் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது என்று அவர் கூறி, இந்த அணுகுமுறையை மாற்றாவிட்டால், மாநில மக்களின் தீவிர எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
















