அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை நீக்க அதன் நிபந்தனையை ஏற்குமாறு சொல்வது அநீதி என, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு தமிழக பா.ஜ.க, கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த குறித்து, தமிழக பா.ஜ.க, தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இதன் மூலம் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஆனால் இதை எதிர்த்து, தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்புவது சிறிதளவும் முதிர்ச்சி இல்லாதது.
தேச நலனில் அக்கறை இல்லாத, வர்த்தக வியூகமே தெரியாத ஒரு முதல்வரை தமிழகம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், காங்கிரஸ்–திமுக கூட்டணி ஆட்சியில் நடந்தது போல எண்ணெய் நிறுவனங்கள் கடனில் மூழ்கியிருக்கும்.
இந்த மாதிரியான அறிக்கைகள், இந்தியாவின் பொருளாதார வலிமையை குறைக்கும். இதை புரியாமல், சுயநல அரசியலுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் முதல்வரை தமிழகம் பெற்றிருப்பது சாபக்கேடு.
சென்னையிலுள்ள சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் ரஷ்யா கச்சா எண்ணெய் கிடைக்கிறது என்பதை ஸ்டாலின் அறியவில்லை. அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியை நீக்க, அதன் அரசின் கட்டளையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அநீதி மட்டுமல்ல, அநியாயமும் ஆகும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
