பாஜக B டீம் என்னை பற்றி அவதூறு பரப்புகிறது: சீமான் குற்றச்சாட்டு!

“நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் சென்றுவிடும் என்று கூறி, பாஜக டீம் என்னை ‘கைக்கூலி’ என திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
“கரூர் சம்பவத்தை ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான தேவைக்காகவே பேசுகின்றன. போன உயிர் திரும்பாது. இனி வரும் காலங்களில் கவனமாக செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்ற பெயரில், வழக்கு, சிறை என அடக்குமுறை பின்பற்றப்படுவது ஜனநாயகத்திற்கு பொருத்தமல்ல.

எங்களுக்கென்று தனி வியூகம் எதுவும் இல்லை. மக்களோடு மக்களுக்காகவே நிற்போம். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.

நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகள் சென்றுவிடும் என்று பாஜக டீம் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது. ஆனால் உண்மையில், கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகளை திமுக மொத்தமாக அறுவடை செய்கிறது. திமுக ஏமாற்றும் அரசியல் நடத்துகிறது, அதையே மக்கள் நம்புகின்றனர்.

ஆர்எஸ்எஸ், திமுக ஆகிய இரண்டிற்கும் பெரிய கொள்கை வேறுபாடு இல்லை. இந்த தேர்தலில் பாஜகவுக்கு தனி இடமில்லை; திமுக, அதிமுக மட்டுமே இருக்கின்றன. பாஜக எப்போதும் வேறு கட்சியின் முதுகுக்குப் பின்னால் தான் இயங்குகிறது.

இஸ்லாமிய மக்களின் வாக்குகளை இத்தேர்தலில் திமுக எளிதாகப் பெற முடியாது. கரூர் சம்பவம் ஒரு நடிகரின் ரசிகர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயரமான விபத்து. ஆனால் அதை ‘நீ தான் காரணம்’ என பட்டிமன்றம் போல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. சினிமா முதல் நாள் காட்சிக்கு வருகிற ரசிகர் கூட்ட நெரிசல் போல், தெருவில் கூட பெரிய அளவில் கூட்டம் திரண்டது. இரண்டு பெரிய கட்சிகளும் பணம் வைத்து வாக்காளர்களை கவருகின்றன. அதனால் அனைவரும் அந்தக் கட்சிகளுடன் கூட்டணிக்கு செல்வதை விரும்புகிறார்கள். ஆனால் என்னுடன் பெரும்பாலும் யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள்,” என சீமான் தெரிவித்தார்.

Exit mobile version