தேனி மாவட்டத்தின் பல்லுயிர் பெருக்கத்தையும், நீர்நிலைகளின் ஆரோக்கியத்தையும் கண்டறியும் நோக்கில், வனத்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட வனத்துறை சார்பில் 28 இடங்கள் மற்றும் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட 28 இடங்கள் என மொத்தம் 56 முக்கியப் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் விவேக்குமார் அவர்களின் நேரடி மேற்பார்வையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இந்தப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றன. பருவநிலை மாற்றம் மற்றும் வலசை வரும் பறவைகளின் வருகையைக் கண்காணிப்பதில் இக்கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகளைப் புலிகள் காப்பக உதவி வன அலுவலர் சாய்சரண், வனச்சரகர் அருள்குமார் மற்றும் வனவர் திவ்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வைகை அணைப் பகுதி, செங்குளத்துப்பட்டி கண்மாய், பெரியகுளம் தாமரைக்குளம், போடி, டொம்புச்சேரி அம்மன்குளம் மற்றும் தேனி தாமரைக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெற்ற இந்த ஆய்வில், வனத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். குறிப்பாக வைகை அணைப் பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார், தேனி நலம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜ்குமார், ஊர்க்காவல்படை வட்டார தளபதி அஜய் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பறவைகளின் நடமாட்டத்தைப் பதிவு செய்தனர்.
இக்கணக்கெடுப்பில், நீல வாள் குருவி (Blue-tailed Bee-eater), பாம்பு தாரா (Oriental Darter), மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கிரே ஹீரோன் (Grey Heron), மற்றும் மரங்கொத்தி போன்ற அரிய வகை இனங்கள் அதிகளவில் தென்பட்டன. மேலும் பர்பிள் சன்பேர்டு, ஸ்பாடட் டவ், நெல் வயல் பிப்பிட், உள்ளான் மற்றும் வால் குருவி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. நீர்நிலைகளில் தண்ணீர் போதிய அளவு இருப்பதாலும், போதிய உணவு கிடைப்பதாலும் பறவைகளின் வருகை திருப்திகரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் தரவுகள், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், பறவைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தவும் உதவும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
















