திண்டுக்கல் மாவட்ட நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு 50-க்கும் மேற்பட்ட அபூர்வ இனங்கள் வருகை

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய வனச்சரகங்கள் மற்றும் ஈரநிலப் பகுதிகளில், வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி மிகப்பரந்த அளவில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஈரநிலப் பறவைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வலசைப் பாதைகளைக் கண்டறியவும் நடத்தப்படும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் சோலை வனங்களில் இக்கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. நத்தம் அருகே உள்ள ஊராளிபட்டி, கோபால்பட்டி பகுதிகளில் அழகர்கோவில் வனச்சரக அலுவலர் சுந்தரவேல் தலைமையிலும், சிறுகுடி-கேசரிக்குளம் பகுதியில் வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையிலும் வனக்காப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பரப்பலாறு அணை, சடையன் குளம், சத்திரப்பட்டி கருங்குளம் மற்றும் நல்லதங்காள் ஓடை ஆகிய முக்கிய நீர்நிலைகளில் வனச்சரகர் ராஜா தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இதில் ஊசி வால் வாத்து, செந்நிற நாரை, மடையன், சின்ன கொக்கு, நெடலை கொக்கு என சுமார் 43 வகையான பறவை இனங்களைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளின் வருகை இந்த ஆண்டு ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல், பழநி பகுதியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணை, கோதைமங்கலம் மற்றும் கலிக்க நாயக்கன்பட்டி குளங்களில் வனச்சரக அலுவலர் கோகுல கண்ணன் மற்றும் வனவர் பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் இரட்டைவால் குருவி, கரிச்சான் குருவி, நீர்க்காகம், செங்கால் நாரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் மனோரத்தினம் சோலை அணைப் பகுதிகளில் வனச்சரகர் பழனி குமார் மற்றும் வனவர் அப்துல்ரகுமான் முன்னிலையில் கணக்கெடுப்பு நடந்தது. இங்குள்ள குளிர்ச்சியான சூழலில் 20-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பறவைகள் கணக்கெடுப்பின் தரவுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் மூலம் நீர்நிலைகளின் தற்போதைய சூழலியல் தரம் மற்றும் பறவைகளின் இனப்பெருக்க காலங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கல்லூரி மாணவர்களையும், சமூக ஆர்வலர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தியதன் மூலம், வனவிலங்குப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இளைய தலைமுறையினரிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version