காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்த போலி வாக்காளர் விவகாரம் நாடு முழுவதும் பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹாவுக்கு, இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் அட்டை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தனது எக்ஸ் தள பதிவில், சின்ஹாவின் பெயர் அவரது சட்டமன்றத் தொகுதியான லக்கிசராய் மற்றும் பாட்னா பங்கிபூரில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்யும் வரைவு பட்டியல் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு பின்னரும் சின்ஹாவின் பெயர் நீக்கப்படவில்லை. பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்ட பிறகும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமா, அல்லது துணை முதல்வரா பொறுப்பு?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த விஜய்குமார் சின்ஹா, “முன்னதாக எனது குடும்பத்தின் பெயர்களும் பாட்னாவில் இருந்தன. ஏப்ரல் 2024-இல், லக்கிசராய் தொகுதியில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தபோது, பாட்னாவில் இருந்து பெயரை நீக்க படிவமும் நிரப்பினேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஏதோ காரணத்தால் பெயர் நீக்கப்படவில்லை. அதனால் BLO-விடம் எழுத்து மூலம் மீண்டும் விண்ணப்பித்து ரசீது பெற்றேன். நீக்கல் படிவம் நிராகரிக்கப்பட்டது. நான் எப்போதும் லக்கிசராய் பகுதியில் இருந்து மட்டுமே வாக்களித்துள்ளேன். அரசியலமைப்புச் சுமை வகிக்கும் ஒருவர் இவ்வாறு அரசியலைக் களங்கப்படுத்துவது தவறு. முழு உண்மை வெளிப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.
இதுகுறித்து, பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி, இரண்டு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதற்கான விளக்கத்தை சின்ஹாவிடம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். பின்னர், தேர்தல் ஆணையம் அவரது பெயர் வேறு EPIC எண்ணுடன் இடம்பெற்றிருப்பதை கண்டறிந்து விளக்கம் கேட்டது. அப்போது, தேஜஸ்வி யாதவ் தனது இரண்டு வாக்காளர் அட்டைகளையும் காட்டி, “முன்னதாக பங்கிபூர் தொகுதியில் என் குடும்பத்தின் பெயர்களும் இருந்தன. ஏப்ரல் 2024-இல், லக்கிசராயில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தேன். பங்கிபூரில் இருந்து பெயர் நீக்க படிவம் நிரப்பினேன். ஆனால், அது நீக்கப்படவில்லை,” என்று விளக்கமளித்தார்.