பெங்களூரு :
ஐபிஎல் 2025-இல், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணி தனது வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, 17 ஆண்டுகால கனவை நனவாக்கியது. இதனை கொண்டாடும் வகையில், ஜூன் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவுக்காக RCB சமூக வலைத்தளங்களில் இலவச அழைப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தை நோக்கி திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் நிலவியது.
இந்தத் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் அந்த குழுவின் அறிக்கை கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதேசமயம், கர்நாடகா உயர் நீதிமன்றமும் தானாகவே இந்த விஷயத்தில் தலையிட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், விசாரணை குழுவின் நிலை அறிக்கையை வெளியிட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதை ரகசியமாக வைக்க அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
வெளியாகிய அறிக்கையில், “போலீசாருடன் ஆலோசிக்காமல் விழாவை ஏற்பாடு செய்தது RCB நிர்வாகமே” என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும்,
விழா தொடர்பான உரிய அனுமதிகள் எந்த அதிகாரிகளிடமும் பெறப்படவில்லை,
ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் RCB அறிவிப்பு வெளியிட்டது,
இதுவே லட்சக்கணக்கான ரசிகர்களை நிகழ்விடம் நோக்கி இழுத்து வந்தது,
இதில் சரியான திட்டமிடல் இல்லாமை, போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் வழங்கத் தவறியது போன்ற காரணங்களால், நிலைமை கட்டுப்பாட்டை இழந்தது,
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தற்போது அரசு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதாரமாக மாறி இருக்கிறது. RCB நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன