இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார். இவர் இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13 அன்று முடிவடைந்ததை அடுத்து, அவர் ஓய்வு பெற்றார்.

புதிய தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய்க்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

யார் இந்த பி.ஆர்.கவாய்?

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதியில் 1960ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று பிறந்த கவாய், 1985இல் சட்டப் பணியை தொடங்கினார். 1987இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சியை ஆரம்பித்தார். அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டங்களில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்.

1992இல் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், பின்னர் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 2003இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2005இல் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2019 மே 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

தன் நீண்ட நீதித்துறை பணிக்காலத்தில் சுமார் 300 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பணமதிப்பிழப்பு மற்றும் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்குகளில் அவர் அளித்த தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.

வரலாற்று முக்கியத்துவம்

தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பி.ஆர்.கவாய் இரண்டாவது பட்டியலினைச் சேர்ந்த தலைமை நீதிபதியாக உள்ளார். அவருடைய தந்தை ஆர்.எஸ். கவாய் மூன்று மாநிலங்களில் ஆளுநராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சமூக ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version