கர்ஜிக்கும் குரலின் கதை : ‘அய்யா ‘ திரைப்படமாகிறது ராமதாஸ் வாழ்க்கை !

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் வாழ்க்கைதான் ‘அய்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக உள்ளது. பா.ம.க. கவுரவத் தலைவர் ஜிகே.மணியின் மகன் ஜிகே.எம். தமிழ்க்குமரன் தயாரிக்கிறாா். திரைப்படத்தை இயக்குநர் சேரன் இயக்க, ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்.

சில ஆண்டுகளாகவே இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குவதற்கான திட்டத்தில் சேரன் ஈடுபட்டு வந்தார். இதற்காக ராமதாஸை நேரில் சந்தித்து, அவரது வாழ்க்கை, அரசியல் அனுபவங்கள் மற்றும் போராட்டங்களை நேர்முகமாக கேட்டறிந்து திரைக்கதையாக எழுதியுள்ளார்.

இன்று, ஜூலை 25 – ராமதாஸின் பிறந்த நாளை ஒட்டி, ‘அய்யா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில், ராமதாஸ் வேடத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவரின் வயது, தோற்றம் மற்றும் அரசியல் பின்னணி காரணமாக அந்த திட்டம் மாற்றம் பெற்றது. தற்போது, ‘நெடுங்குடி’ ஆரி என பரிசுபெற்ற நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் ராமதாஸாக களமிறங்குகிறார்.

“ராமதாஸ் சார் ஒரு சமூக வீரர். அவரது குரல், பல ஆண்டுகளாகக் குரலற்ற மக்களின் நலனுக்காக ஒலித்தது. இப்போது அந்த குரல் ‘அய்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் ஒலிக்க உள்ளது,” என ஆரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டை மையமாக கொண்ட கதை: படக்குழுவின் அறிமுக போஸ்டர்களில் 1987ம் ஆண்டு நடந்த வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தைக் குறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த ஆண்டில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு காலத்தில், இட ஒதுக்கீட்டுக்காக நடந்த போராட்டத்தில் 21 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது, படம் அந்தக் காலகட்டத்தை மையமாக கொண்டதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

திரைப்படத்திற்கான நான்கு முக்கிய போஸ்டர்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சமூக நீதிக்காக போராடிய ஒருவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கவுள்ள ‘அய்யா’ திரைப்படம், அரசியல் வரலாற்றிலும், திரை வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயமாக அமைவது உறுதி.

Exit mobile version