இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விளக்கம் அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் பங்கேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர், நிகழ்வுகளைப் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். வாக்காளர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களது விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு, வாக்காளர்களிடையே கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வது தொடர்பான செயல்முறை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
வாக்காளர்கள் படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும், குறிப்பாக 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் அதனைச் சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.புதிய சேர்க்கை: புதிய பெயர்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலைகள் குறித்தும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடுகளுக்குச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை விநியோகம் செய்து வருகின்றனர். இதனையடுத்து, பல்வேறு கட்டங்களாக வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில், வாக்காளர் பதிவு அலுவலர் உதகை வருவாய் கோட்டாட்சியர் டினு அரவிந்த், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ், தேர்தல் தனி வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
