கவன ஈர்ப்பு பேரணி: தேனியிலிருந்து நூற்றுக்கணக்கான ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கவன ஈர்ப்பு பேரணியில் தேனி மாவட்டத்திலிருந்து திரளான பணியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக:

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 10,000 வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி, மாதம் ரூபாய் 10,000 ஆக வழங்க வேண்டும். நிர்வாக வசதிக்காகப் பெரிய அளவில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, புதிய ஊராட்சி ஒன்றியங்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைச் சென்னை பேரணியில் வலுவாக முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் ஆ. முத்துச்செல்வம், மாநிலத் துணைத் தலைவர் பாண்டியராஜன் மற்றும் மாநில மகளிர் அணிச் செயலாளர் ஆர். செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னையில் நடைபெறும் பேரணியில் தேனி மாவட்டத்தின் பங்களிப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 130 கிராம ஊராட்சி செயலாளர்கள் மட்டுமின்றி, ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் விநியோகஸ்தர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குநர்கள், கணினி உதவியாளர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனி மாவட்டச் செயலாளர் இ. வேல்முருகன், ஒன்றியத் தலைவர் பி. பாலசந்தர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். நாளை சென்னையில் நடைபெறும் இந்தப் பேரணி, தமிழக அரசின் கவனத்தை ஈர்த்துத் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் எனப் பணியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version